தமிழ் சமையல்ருசி

நீங்களும் எளிதாக சமைக்கலாம்!. உங்கள் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்

மசாலா குருமா

தேவையானவை:

விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது - 2 கப், வெங்காயம் - 3, தக்காளி - 4, உப்பு - தேவைக்கு. தாளிக்க: சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
மசாலா, குருமா... இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.
- நன்றி: விகடன்

கோபி மசாலா

தேவையானவை:
காலிஃப்ளவர் - சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க: பட்டை - 1, சீரகம் - அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த் தூள், கசகசா - தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு - தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 8.


செய்முறை:


காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!

- நன்றி: விகடன்

தக்காளி குருமா

தேவையானவை:

பெ. வெங்காயம் - 3, தக்காளி - 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், கசகசா - 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.



அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6, பட்டை, லவங்கம் - தலா 1, சோம்பு - கால் டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.


இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!

- நன்றி: விகடன்

பெப்பர் பீஸ் மசாலா

தேவையானவை:

பட்டாணி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.



செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்... ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!
-நன்றி விகடன்

புதினா குருமா

தேவையானவை:
பச்சை பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு, தேங்காய்த்துருவல் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!
-நன்றி விகடன்

பீஸ் மசாலா

தேவையானவை:

பட்டாணி & 1 கப், பெரிய வெங்காயம் & 3, தக்காளி & 3, புளிக்காத தயிர் & கால் கப், இஞ்சி, பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 50 கிராம், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு.

செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

-நன்றி விகடன்

தினமலர் இதழுக்கு நன்றி

தமிழ் சமையல்ருசி இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 11-3-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு


வெஜிடபிள் குருமா!

தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது & 2 கப், பெ. வெங்காயம் & 2, தக்காளி & 3, தேங்காய்த் துருவல் & 1 கப், பொட்டுக்கடலை & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் & தலா 2, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 5 பல், சோம்பு & அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் & 5.


செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.